ஒரு பார்வை

October 19, 2006

வல்லரசாக எத்தணிக்கும் இந்தியாவிற்கு தமிழீழம் எதிரியாக இருப்பது நல்லதா? – 01

Filed under: India,LTTE,Politics,Tamil Eelam — CAPitalZ @ 11:20 am

சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள்.

ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய‌ வேண்டும்? அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள்.

அவர்கள் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ அறிவுடையதாக இருக்கிறது. ஆனால், உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்பது தான் உண்மை.

உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா?

அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானியா அரசு கௌரவித்ததா? தென் ஆபிரிக்காவிலும் இதே நிலமை தான். அல்ஜீரியர்கள், ஃபிரான்ஞ்சு அரசை எதிர்த்து போராடும்போதும் இதே நிலமை தான். ஏன் உலகில் எல்லா நாடுகளிலும் இதே நிலமை தான். சும்மா புலிகளுக்கு எதிர்ப்பு என்பதற்காக தமிழினத்தை ஒழிக்க வழி கோலாதீர்கள்.

அமெரிக்காவின் உலக ஆட்சி குறைந்து கொண்டு வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனேகமாக எல்லோரும் அமெரிக்காவை வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். ஆதலால், இனி யார் உலகை ஆழப்போவார் என்று யோசித்து அவரை கைக்குள் போடவேண்டும். எங்கள் பிராந்தியத்தைப் பொறுத்த வரையில் இந்தியா, சீனா தான் இருக்கிறது. இதில் எவர் பலம் வாய்ந்தவராக வருவார் என்று நீங்களே தீர்மானியுங்கள்.

இலங்கை அரசால் புலிகளை ஒழிக்க முடியவில்லை. இந்திய அரசாலும் ஒழிக்க முடியவில்லை. இந்திய‍‍ இலங்கை கூட்டரசாலும் புலிகளை ஒழிக்க முடியவில்லை.

ஆகவே வல்லவனை எதிர்ப்பதை விட வளைத்துப் போடுவது தான் வல்லரசாக வர எத்தணிப்பவருக்கு நல்லது என்று நினைக்கிறேன். அதிலும் இந்தியாவின் அயல் நாடு தமிழீழம். சீனா வளைத்துப்போட்டால், இந்தியாவின் புற்றுநோயாகி விடும்!

அதன் பிறகு என்ன நடக்கும் என்று சீனாவின் கையில் தான் இருக்கும். இந்தியாவிற்குள் எல்லோரும் ஒற்றுமையாய் வாழவில்லை. அப்பப்போது குண்டு வெடிக்குது, அப்பப்போது மதக் கலவரம் என்று நடக்குது. போதாததற்கு மதத்திற்கு என்று ஒதுக்கீடுகள் வேறு. இது போதும் இந்தியாவை பிரிக்க. இப்போது பிரியாமல் இருப்பதற்கு காரணம் எந்த மாநிலமும் சுயேட்சையாக தன்னை பொருளாதாரத்தில் தக்க வைத்துக் கொள்ள முடியாமை. எப்போது ஒரு மாநிலம் தன்னை பொருளாதார ரீதியில் [நாடாக] தக்க வைத்துக் கொள்ள முடியுமோ, எப்போது அது இந்திய அரசுடன் முரண்படுகுதோ அப்போது அந்த மாநிலம் பிரிவினையைப் பரிந்துரைக்கும். அப்போ சீனா முழு உதவி கொடுக்கும். ஏன் பாகிஸ்தானும் கொடுக்கும். சீனா இராணுவ உதவி கொடுத்தால் மட்டுமே போதும் [வட கொரியாவிற்கு கொடுத்தது போல்]. அப்போது தமிழீழத்தின் நேச நாடாக இந்தியா இருக்காவிடில், தமிழீழம் வாயிலாக இந்திய பிரிவினைவாதிகளுக்கு சீனா உதவி செய்ய தமிழீழ மக்கள் அனுமதிப்பார்கள் [நாங்கள் கஷ்டப்படும்போது எங்களுக்கு சீனா தானே உதவியது, அதற்காக என்று]. இலங்கை ஏற்கனவே சீனாவின் நேச நாடுதான் [சிறீமாவோ பண்டார நாயக்கா காலத்திலிருந்து]. போதாததற்கு பாகிஸ்தானின் நேச நாடு கூட [சொல்லவா வேண்டும்?]. பிறகென்ன ரஷ்யா எப்படி பிரிந்ததோ அப்படி தான் இந்தியா பல கூறாகப் போய்விடும்.

இவற்றை எல்லாம் தொலைநோக்குச் சிந்தனையுடன் இந்தியா சிந்திக்குமானால், இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கும். உண்மையில் றோ [RAW] விற்கு புத்தி இருக்கா என்று வருங்காலம் பதில் சொல்லட்டும்.

விரைவில் பாகம் – 02 >>

 

பி.கு.:  இந்தியாவிற்கு எதிராக எழுதியிருப்பதாக என்னைத் திட்டித் தீர்க்க வேண்டாம்.  எப்போது இந்தியா வல்லரசாக வரவேண்டும் என்று தீர்மானம் எடுத்ததோ அப்போதே இப்படியும் சிந்திக்கத் தொடங்க வேண்டும். ரஷ்யாவிற்கு நடந்தது வரலாறு.

_____
CAPital

Advertisements

October 5, 2006

பழைய தமிழீழமும் புதிய தமிழ் நாடும்

Filed under: India,Sri Lanka,Tamil Eelam,Tamil Nadu — CAPitalZ @ 2:57 pm
 • சாதிப் பிரச்சினை இவ்வளவு மோசமாக இருக்கவில்லை.
  • சாதிச் சான்றிதழ், சாதிக் கழகம், சாதி வேட்பாளர் என்று இருக்கவில்லை.
  • சாதி அடிப்படையில் வேலை, சாதி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அனுமதி என்று இருக்கவில்லை.
  • பாடசாலை/ வேலை விண்ணப்பப் பத்திரத்தில் சாதி கேட்கப்படவில்லை.
   • மதம் கேட்கப்பட்டது.
   • மொழி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு வளங்கப்பட்டது. [இதனால் தான் தமிழீழப் போரே உருவானது]
 • ஆகலும் குறைந்த சாதிக்காரர்கள்:
  • வீட்டு முற்றத்தோடு நிற்பாட்டி விடுவார்கள். வீட்டு விறாந்தைக்கு [கட்டிடத்திற்குள்] வர அனுமதிக்க மாட்டார்கள்.
  • குடிக்க, உண்ண என்று புரிம்பாக கோப்பை, கிண்ணம் வைத்திருந்தார்கள், முதலாளிகளின் வீட்டில்.
 • குறைந்த சாதிக்காரர் என்று எவரும் கோவிலுக்குள் போகாமல் இருக்கவில்லை.
 • பிராமணர்களை எப்போதும் உயர்ந்த மனிதர்களாக பார்த்ததில்லை. அவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்பவர்கள் என்பதைத் தவிர அவர்கள் சாதி உயர்ந்த சாதி என்று எண்ணியதில்லை. பொது மக்களுக்கும் பிராமணர்களுக்கும் பெரிய இடைவெளி இருந்திருக்கவில்லை. பிராமணர்கள் வாழ என தனியாக ஒரு “அக்கிரகாரம்” இருந்ததில்லை. மற்றயவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்ததால், பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு என்று இருக்கவில்லை. அவர்கள் தமக்கென்று ஒரு பாதையை வகுக்கவும் எத்தணித்தது கிடையாது.
 • சாதிகளிலே வெள்ளாளர் சாதி [விவசாயம் செய்பவர்கள்] தான் உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இந்தச் சாதிக்கும் மற்றய சாதிகளுக்கும் தான் இடைவெளி இருந்தது. [தலைவர் கீழ் சாதிக்காரர் என்பதாலேயே பல வெள்ளாளர்களுக்கு அவர் மீது வெறுப்பு.]
 • கோவிலில் தமிழில் பாட தடை இருக்கவில்லை.
 • இலஞ்சம் இருக்கவில்லை.
  • அதாவது நேர்மையாக எதைப் பெறுவதற்கும் இலஞ்சம் தேவையில்லை. ஏதாவது ஓர் ஆவணம் இல்லை ஆதலால் குறுக்கு வழி உபயோகிக்க இலஞ்சம் தேவைப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், கழவு செய்ய இலஞ்சம் உபயோகிக்கப்பட்டது.
 • மத அடிப்படையில் சண்டை பிடித்தது இல்லை.
  • விளையாட்டுக் கழகங்கள் சண்டை பிடித்தவை தான்.
 • பல்கலைக்கழங்களில் ராக்கிங் இருந்தது/ இருக்கிறது.
 • கிறிஸ்தவ சேர்ச் ஐயும் நாங்கள் கோவில் என்று தான் சொல்லி வந்தோம்.
 • முஸ்லிம் என்று இல்லாமல், சோனகர் என்று தான் இருந்தார்கள்.
 • இந்து என்று இல்லாமல் சைவம் என்று தான் இருந்தது.
 • மகாபாரதம், இராமாயணத்தை விட 63 நாயன்மார்களின் கதைகள், பாட்டுக்கள் தான் பாடசாலையில் பயிற்றப்பட்டது.
  • கீதையைப் பற்றி நான் கேள்விப்பட்டதே உயர் வகுப்பு படிக்கும்போது தான்.
  • தமிழ் நூல்களான மணிமேலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
 • ஆங்கிலச் சொற்களின் உபயோகம் மிக மிக அரிது.
  • வைத்தியர்கள் தான் பாவித்தார்கள்.
 • பிச்சைக்காரனைக் காண்பது மிக மிக அரிது.
  • பிச்சக்கரனை சிறுவர்கள் துன்புறுத்தினார்கள் (அ) நக்கல் அடித்தார்கள்.
 • வெள்ளைக்காரனைக் கண்டால் நம்மை விட உசர்ந்தவனைப் பார்ப்பது போல் பார்த்தார்கள்.
 • பெண் வீட்டார்கள் தான் மாப்பிள்ளை கேட்கவேண்டும்.
 • தாயின் சகோதரனை [தாய்மாமன்] ஒருபோதும் திருமணம் செய்வதில்லை.
  • மச்சான், மச்சாள் என்று திருமணம் செய்தார்கள்.
  • மாற்றுத் திருமணம் இருந்தது [பெண் கொடுத்து பெண் எடுத்தல் என்றார்கள்].

சைவப் பாடமும், தமிழ்ப் பாடமும் தமிழ் நாட்டைப் பற்றியே அனேகமாக இருந்ததால் தமிழ் நாட்டின் மீது ஒரு மதிப்பு. தமிழ் நாட்டுக்கும் நமக்கும் ஏதோ இரட்டைக் குழந்தைகளின் ஒற்றுமை போலும் என்று இருந்தேன். இந்தியாவிற்குள் தான் தமிழ் நாடு இருக்கிறதென்பது பல காலம் கழித்துத் தான் எனக்கு விளங்கியது . காரணம், தமிழ் நாட்டுக்கு ஒரு முதல்வர், இந்தியாவிற்கு ஒரு முதல்வர். இப்படி நம்ம நாட்டில் இருக்கவில்லை தானே.

 • எனது ஐயா சொன்னது:
  • வடமராட்சியில் [தமிழீழத்தின் வடகோடியில் உள்ள கிராமங்கள்] இருந்து கப்பல்கள் தமிழ் நாட்டுக்கு போய் தங்கம், தமிழ் பத்திரிகை, புத்தகங்கள், புடவை, சறம் என்று கொண்டுவந்தார்களாம். இங்கிருந்து தேங்காய், பாக்கு, கோப்பிக் கொட்டை, ஈயம் ஏற்றுமதி செய்யப்பட்டதாம். [தமிழ்ப் பத்திரிகை, புத்தகங்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு கொஞ்சக் காலம் தடை விதித்திருந்தது. அந்தக் கால கட்டத்தில் தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது].

_____
CAPital

October 4, 2006

இந்தியாவில் புரட்சி?! – 02

Filed under: India,Politics — CAPitalZ @ 10:52 am

முத்தமிழ் குழுமத்தின் இழையில்,  ஒப்பாரி வைக்காதீர்கள் கம்யூனிஸ்டுகளே, நடக்கும் கருத்து விவாதத்திற்கு என் கருத்து
சரி, எனக்கு கம்யூனிசமோ சோசலிசமோ சனநாயகமோ இந்தியாவிற்கு நல்லது என்று தெரியாது. ஆனால், இன்று இந்தியா மிக மிக ஊழல் நிறைந்த நாடாக இருக்கிறது. இதை சரிக்கட்ட ஏதாவது தடாலடியாக செய்தாக வேண்டும். அது தான் என் விருப்பம். அதற்காக கம்யூனிசத்திற்கு மாறினால் ஊழல் நின்று போய் விடும் என்று சொல்ல முடியுமா?

ஆகவே, ஊழல் செய்யாமல் இருக்குமுகமாக ஒரு சிறந்த கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் காவல் சட்டங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இது எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் முதலில் லஞ்சம் ஒழிய வேண்டும்.

இன்றய சூழலில், இந்திய இளைஞர்களுக்கு வேலை தேவை. அது தான் முக்கிய பிரச்சினை. பல்கலைக்கழக பட்டதாரி ஆட்டோ ஓட்டிகொண்டிருக்கிறான். அதை வெளிநாட்டு நிறுவனங்கள் நிவர்த்தி செய்கிறதென்றால் அதை அரசு அனுமதிப்பதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா அப்படி அனுமதிக்காவிட்டால் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு நாட்டுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து விடுவார்கள். இதனால் இந்தியாவை விட மற்றய நாடு வேகமாக வளர்ச்சி அடையும். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

ஆனால், இப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தாலும் உள்நாட்டு நிறுவனங்களை அரசு பாதுக்காக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனக்களுக்கு அதிக வரி வசூலித்து உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரி தள்ளுபடி செய்து ஈடு கட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல், உள்நாட்டில் புதிய நிறுவனங்கள் தோன்ற அரசு வழிசமைக்க வேண்டும். ஏன்? என்றைக்கு இந்தியாவில் நிறுவனம் வைத்திருப்பதால் இலாபம் ஈட்ட முடியாமல் போகிறதோ அன்றைக்கு அத்தனை வெளிநாட்டு நிறுவனங்களும் மூட்டை கட்டிவிடும். அப்போது இந்தியா ஒரு பெரும் பொருளாதரச் சிக்கலுக்குள் தள்ளப்படும். இந்தியா மீண்டும் பிச்சக்கார நாடாக போனாலும் போகலாம். இரண்டாம் உலகப் போரில் ஆயுத தளபாடங்கள் உற்பத்தி செய்து இலாபம் ஈட்டிய நாடுகள், போர் முடிந்த பின் ஒரு பெரும் பொருளாதார சிக்கலுக்குள் மாட்டிகொண்டது போல். கனடாவில் கூட பாண் வேண்டுவதற்கே கஷ்டப்பட்டார்களாம். இதை மனதில் நிறுத்தி வரும் இலாபத்தில் உள்நாட்டு நிறுவனங்கள் வளரவும், மற்றய துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசு உழைக்க வேண்டும். இப்படி இந்திய அரசு செய்கிறதா?

சீனாவில் உற்பத்தி செய்தால் செலவு குறைவு என்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலேயே உற்பத்தி செய்கிறார்கள். சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இருந்தாலும் அவர்கள் சில உதிரிப் பாகங்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். சீனாவில் தான் பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு முழு வடிவம் கொடுக்கப்பட்டுகிறது. ஆனால் சீன அரசு, இவர்களின் இந்த உதிரிப் பாக இறக்குமதிக்கு தனியாக ஒரு வரி அறவிடுகிறது. சீன அரசு சும்மா கண்ணை மூடிக்கொண்டு செயற்படவில்லை. அவர்கள் மிகவும் உசாராகத் தான் இருக்கிறார்கள். அப்படி ஒரு கட்டமைப்பே சிறந்த நாடாக உயர்த்த வல்லது.

<< பாகம் – 01

_____
CAPital

October 3, 2006

தமிழ் ஒருங்குறி ?! – 17

Filed under: India,Internet,Tamil Unicode — CAPitalZ @ 10:39 am

ஒரு சட்டம், வரையறை, கோட்பாடு இயற்றுவதில் வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் தான். ஏனெனில், அவன் மற்ற இனத்தவர்களை விட இவைகளை இயற்ற முதலில் எத்தணித்தவன். ஆகவே, அவனுக்கு பல முறை முட்டி மோதி, பல முறை மேம்படுத்தி பழக்கப்பட்டவன். இன்றும், கையில் அதிகாரம் இருந்தால் கூட களவு செய்ய முடியாதபடி (அ) செய்தாலும் பிடிபடும்படி நுணுக்கமாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி இருப்பதால் தான், கடையின் சொந்தக் காரன் வீட்டில் இருக்க வேலைக்காரன் கல்லாவில் அமர்ந்தாலும் கடை நஷ்டத்தில் போவதில்லை.

ஆகவே, ஒருங்குறி அமைப்பின் சட்ட திட்டங்கள் சரியானதாகவே இருக்கலாம். ஒருங்குறி ஒரு உலக மொழி ஒருங்கமைப்பு என்ற ரீதியில் நோக்குவோமானால் அவர்களின் சட்ட திட்டங்கள் மிகச் சரியானவையே. அதையே, தமிழை மட்டும் பார்த்தால், தமிழுக்கு விவேகக் குறைவே. இருந்தாலும் தமிழை மட்டும் அவர்களால் பார்க்க இயலாது. ஆகவே அவர்கள் நிலைப்பாடு சரியானதே.

இதில் இருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டிய விடயம்? இனிமேலாவது தமிழ் மொழியை யாரும் பார்த்துக்கொள்வார்கள் என்று விடாமல், நாம் தாம் நம் மொழியின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும். இதை தமிழர்கள் உணர்வார்களா என்பது கேள்விக்குறி.

ஒருங்குறி உதவி வருங்காலத்தில் சகல மென்பொருளிலும் வழங்கப்படும். அதில் ஐயமில்லை. ஆதலால், எதிர்காலத்தில் தமிழுக்கு பிரச்சனை இருக்காது. ஆனால், மற்றய இடர்களான இடம், வேகம் என்பன இருந்து கொண்டே தான் இருக்கும்.என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும், இன்னமும் பலருக்கு கணினியே கிட்டாத நிலை தானே நிலவுகிறது. அப்படியாயின், ஒருங்குறி வேலை செய்யக்கூடிய கணினி கிட்ட இன்னும் எத்தனை காலம் எடுக்கும் என்பதை எதிர்காலம் பதில் சொல்லும். இவ்வளவு காலமும் தமிழுக்கு ஒரு பின்னடைவே. மற்றய மொழிகள் வளர்ந்து கொண்டு வருகையில் தமிழ் மிக மெதுவாகவே துளிர்க்கிறது. இணைய முகவரி 255 எழுத்துக்களுக்குள் இருத்தல் வேண்டும். தமிழில் இணைய முகவரி வைத்தால் இந்த கட்டுப்பாட்டை இலகுவாக தாண்டும். இதை இப்போதே சில வலைப்பதிவாளர்களின் இடுகைகளில் கவனிக்கலாம். மேலதிக எழுத்துக்கள் வெட்டப்படுவதால் ஒழுங்காக வேலை செய்யாமல் போய்விடும்.   [மேலும் அறிய இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை] இதை சரி செய்ய இன்னும் கொஞ்ச காலம் அதிகமாக தேவை. போராடிப் போராடியே பழக்கப்பட்டவர்கள் நாம். இதில் தோற்று விடுவோமா என்ன?

என்னைப் பொறுத்த மட்டில் இந்திய அரசாங்கம் இனிமேல் எந்த மாற்று கருத்துக்களையும் ஒருங்குறி அமைப்புக்கு எடுத்துச் செல்ல ஆதரவளிக்காது. அரசே ஆதரவளிக்காத போது ஒருங்குறி அமைப்பும் அதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை. எப்பவும் பட்ட பின் தானே தமிழனுக்கு ஞானம் வரும்.

இருந்தாலும், தமிழின் மேம்பட்ட வடிவமைப்பை இன்று செய்து வைத்திருந்தால், எதிர்காலத்தில் உதவலாம் தானே. இனிமேல் எதாவது ஒரு அமைப்பு புதிதாக ஒரு முயற்சி செய்தால், அதற்கு தமிழை சரியாக, மிக மேன்மையானதாக வளங்கக்கூடியதாக நாங்களே முயற்சி செய்ய வேண்டும். அடுத்த முறையும் தவறினால், “குட்டக் குட்டக் குனிபவன் மொக்கன்” என்ற கதையாகிவிடும்.

<< பாகம் – 16

இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை

Filed under: Tamil Unicode,WordPress Tips — CAPitalZ @ 10:39 am

வலைப்பதிவில் இடுகைகள் இடும்போது, தமிழில் தலைப்பை வைப்பதினால் சில தொழில்நுட்ப சிக்கல்களுக்குள் தள்ளப்படுகிறார்கள், நமது தமிழ் வலைப்பதிவாளர்கள். அவற்றை சரி செய்ய வழியை இங்கே தருகிறேன்.

ஒருங்குறித் தமிழ் கணினியில் வேலை செய்தாலும், எல்லா இடங்களிலும் ஒருங்குறித் தமிழ் வேலை செய்யாது. இதற்குக் காரணம் தமிழ் இரண்டாம் தர மொழியாக ஒருங்குறியில் ஏற்றப்பட்டதே. [மேலும் அறிய தமிழ் ஒருங்குறி?!]

உங்கள் இடுகைகளை தமிழ் தலைப்பில் சேமிக்கும்போது வலைப்பதிவு மென்பொருள் அந்த தலைப்பை இணைய முகவரியாக எடுத்துக்கொள்கிறது. ஆனால், “போ” என்பது இணைய முகவரி இடும் இடத்தில் அப்படி சரியாகத் தெரியாது. அது இணைய முகவரிகளை சேமிக்கும் முறையில் மாற்றியே தெரியும். அது மட்டுமல்லாமல் “போ” என்பது தமிழ் ஒருங்குறியில் 2 குறிகள். ஒரு குறி அல்ல. அப்படித் தான் தமிழ் ஒருங்குறி அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நீங்கள் உங்கள் இடுகைக்கு “நான்” என்று தலைப்பைக் கொடுத்தால் அது உண்மையில் 4 குறிகள். இணைய முகவரிக்கு 255 எழுத்துக்களை தாண்டக் கூடாது என்பது விதியாகும். இப்போது நீங்கள் ஒரு பெரிய தமிழ் பெயரைக் கொடுத்தால், மீதமுள்ள எழுத்துக்கள் காணாமல் போய்விடும். அப்போ உங்கள் இடுகைகள் தெரியாமல் “404 – Page Not Found” என்று காட்டும் அல்லது பின்னூட்டமிட முடியாமல் இருக்கும். இந்த 255 எழுத்துக் கட்டுப்பாடே இதற்குக் காரணம்.

இதே 255 எழுத்து கட்டுப்பாடுதான் தமிழ் குழுமங்களில் தமிழில் தலைப்பை வைத்து அதற்கு மறுமொழி மின்னஞ்சலூடாக அனுப்பும்போது இழை பிரிந்து புதியதோர் இழை உருவாகுகிறது. ஒரு மிக நீண்ட எழுத்துக்களைக் கொண்ட தலைப்பில் கடைசியில் சில ஒருங்குறி குறிகள் வெட்டப்பட்டாலுமே அவை புதிய இழையாகிவிடும். கவனிக்கவும். நான் இங்கு எழுத்து என்னும்போதெல்லாம் தமிழின் ஒரு எழுத்தைக் குறிப்பிடவில்லை. தமிழ் “போ” என்பது ஒருங்குறியில் 2 குறிகள். அதே இணைய முகவரியில் இந்த இரண்டு குறிகளுமே மேலும் பல குறிகளாக மாற்றித் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழில் இரண்டெழுத்து தலைப்பு இணைய முகவரியாகும்போது பல எழுத்துக்கள்!
இதை சரி செய்ய வழிகள்:

 1. இடுகைகளுக்கு எந்தத் தலைப்பையும் கொடுக்காமல் முதலில் பிரசுரியுங்கள். வலைப்பதிவு மென்பொருள் [WordPress/ Blogspot] தானாகவே ஒரு இலக்கத்தைக் கொடுத்து சேமிக்கும். பின் அந்த இடுகையை திருத்த முயற்சி செய்து [edit], உங்களுக்கு விருப்பமான தலைப்பை கொடுக்கவும். இப்போ உங்கள் இடுகை ஒரு இலக்கமாக சேமித்து இருந்தாலும், மற்றவர்களுக்கு இடுகைத் தலைப்பு சரியாக உங்கள் விருப்பம் போல் தெரியும்.
 2. இடுகைகக்கு ஆங்கில தலைப்பைக் கொடுங்கள். பிரசுரித்த பின் மீண்டும் திருத்த முயற்சி செய்து [edit] உங்களுக்கு விருப்பமான தலைப்பை [தமிழிலோ] கொடுக்கலாம். இப்போ உங்கள் இடுகை ஆங்கில சொற்களால் சேமித்து இருந்தாலும், மற்றவர்களுக்கு இடுகைத் தலைப்பு சரியாக உங்கள் விருப்பம் போல் தெரியும்.
 3. WordPress உபயோகிப்பவர்களுக்கு மட்டும்:
  நீங்கள் புதிய இடுகை எழுத எத்தணிக்கும் போது உங்கள் வலது புறத்தில் சிறு சிறு தகவற் துளி போல் இருக்கும். அதில் “Post Slug” என்பதைக் கண்டு பிடியுங்கள். அதற்கு அருகாமையில் இருக்கும் ‘+’ சக குறியை தட்டி விரித்தால், ஒரு பெட்டி வரும். அந்தப் பெட்டிக்குள் நீங்கள் விருப்பமான ஆங்கில (அ) எண்ணில் தலைப்பை கொடுக்கலாம். அதே நேரத்தில் “Write Post” என்பதற்கு கீழ் உள்ள “Title” என்னும் இடத்தில் தமிழில் தலைப்பைக் கொடுக்கலாம். இது மேலே சொல்லப்பட்ட மேலதிக வேலையை இல்லாமல் ஆக்குகிறது.

Wordpress' Post Slug not expanded

Wordpress' Post Slug expanded

Wordpress' Post Slug and Title filled

பி.கு.: தேடு தளங்கள் [Search engines] இணைய முகவரியில் வரும் சொற்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். ஆகவே, நீங்கள் உங்கள் இடுகையை எண் கொடுத்து சேமித்தால் (அ) “blog-spot_25” என்று சேமித்தால் உங்கள் இடுகையை கண்டுபிடித்து அதிக புள்ளி கொடுக்கும் சந்தர்ப்பம் குறையும். நீங்கள் ஆங்கில/ தமிழ் சொற்களில் சேமித்தால், அந்த சொற்களை தேடும்போது உங்கள் இடுகைக்கும் முக்கியத்துவம் கூட கொடுக்கப்படும், தேடு தளங்களால்.

ஆனால் இன்னும் ஒருங்குறியின் இரண்டாம் தர மொழிகளுக்கு [தமிழ் உட்பட] இணைய முகவரியில் போதுமான உதவி இல்லாததால், தமிழின் ஒவ்வொரு எழுத்துக்களும் “%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%” இப்படி குதர்க்கமாக பிரித்து தான் தெரியும். நீங்கள் உங்கள் இடுகையின் முகவரியை வேறொருவருக்கு கொடுக்க எத்தணிக்கும்போதோ (அ) உங்கள் வலைப்பதிவு பயனர் உங்கள் இடுகையின் இணைய முகவரியை வேறொருவருக்கு கொடுக்க விரும்பினால் உங்கள் இடுகையின் இணைய முகவரி மிக நீண்டதாக, குதர்க்கம் நிறைந்ததாக காணப்படும்.

சிறிய இணைய முகவரியாக வருவதற்காகவும், தேடு தளங்களில் உங்கள் இடுகையின் மதிப்பு அதிகரிக்கவும் இடுகைகளை ஆங்கில சொற்கள் [உங்கள் இடுகையின் கருத்து பொறிந்த சொற்கள்] கொண்டு சேமித்தல் நன்று என்பது என் அறிவுறை.
இந்த இடுகைக்கு நான் தமிழில் தலைப்பைக் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஆங்கில சொற்கள் கொண்டு “post-slug-tamil-unicode-webpage-address-255” சேமித்து இருக்கிறேன். இந்த சொற்களைத் தேடினால், எனது இடுகை தெரியட்டும் என்பதற்காக.
______
CAPital

« Previous PageNext Page »

Blog at WordPress.com.