ஒரு பார்வை

June 15, 2006

நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்? [02]

Filed under: Sprituality — CAPitalZ @ 2:23 pm

ஆமாம் முன்னேற வேண்டும். நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். முன்னேறி என்ன பயன்?

பணம் இருந்தால் உலகத்தில் எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கலாமே. பணம் இருந்தால் எல்லோரும் என்னை மதிப்பார்கள். இதை சம்பாதிக்கத் தானே சிறுவயதிலிருந்து பாடுபடுகிறேன். படி படி, உழை உழை எல்லாம் இதற்காகத் தானே.

வாழ்வதற்கு பணம் தேவை என்றால் நான் படிக்காமலே வேலை செய்யத் தொடங்கியிருக்கலாமே? ஏன் இவ்வளவு துன்பப் பட்டு கற்றிருக்க வேண்டும்? எவன் எவன் கண்டுபிடித்ததோ எல்லாம் எனக்கெதற்கு. அவன் அறிவாளியாக இருக்கட்டும். அது அவன் திறமை. என்னை ஏன் அவனைப் போல் ஆக்க முற்படுகிறீர்கள். நான் என்ன கேட்டேனா? என்ன இது, நான் எது செய்ய ஆசைப்படுகிறேனோ அதைத் தவிர வேறு எல்லாவற்றையும் எனக்குள் திணிக்குகிறீர்கள்.

ஏன் கற்க வேண்டும்? நான் அப்போதிருந்தே திருடி இருக்கலாமே. வேறு ஏதாவது குறுக்கு வழியில் பணம் பண்ணியிருக்கலாமே. பள்ளிக்குப் போகும் நேரத்தில், நான் குறுக்கு வழியில் சம்பாதித்திருந்தால் எவ்வளவோ செல்வம் சேர்த்திருக்கலாமே. அப்போதிருந்தே பணம் பண்ணியிருந்தால், அதிக பணம் கிடைத்திருக்குமா? சம்பாதிக்க வேண்டும். அதிகமாக சம்பாதிக்க வேண்டும். அதிலும் நேர்த்தியாக சம்பாதிக்க வேண்டும். படித்தால், இலகுவாக பணம் பண்ணலாமா? சும்மா இருந்து மற்றவர் பணத்தை எடுப்பது அதை விட இலகு தானே. மீண்டும் அந்த நல்லவன். நல்லவனாகத் தானா சம்பாதிக்க வேண்டும்? சகல திசைகளிலும் நீங்கள் சொல்வதையே என்னை செய்யத் திணிக்குகிறீர்களே.

எனக்கென்று ஒரு ஆசை, எனது விருப்பு வெறுப்பு, எதிலும் உங்கள் தலையீடு. சுதந்திரம் சுதந்திரம் என்று எல்லோரும் பேசுகிறார்கள், ஆனால் எனக்கு மட்டும் சுதந்திரமில்லை போலும். இப்படித் தான் உண்ண வேண்டும், இப்படித் தான் கதைக்க வேண்டும், அப்படிச் செய்யக் கூடாது, இப்படிப் பார்க்கக் கூடாது. என்னோடு பிறந்த என் உறுப்புக்களையே என்னால் தன்னிச்சையாக செய்வதற்கு எனக்கு சுதந்திரம் இல்லை. வலது கையை இதற்கு பயன் செய், இடது கையை அதற்கு பயன் செய்; என்ன இது இடைஞ்சல். எனக்கேன் இந்த உறுப்புகள்? மற்றவர்கள் விருப்பப்படி நடக்க என்னுள் உறுப்புகள். எனது பெயரைச் சுமந்துகொண்டு எனக்கெதிராக மற்றவர்களுக்காக செய்யும் தப்புக்கள். எனது பெயர். அதையும் எனக்குத் தெரியாமலே வைத்து விட்டார்கள்.

ஆடு உண்ணலாம், ஆனால் நாயை உண்ணக் கூடாது. இரண்டும் ஒரே விலங்கினம் தானே. இறால், நண்டு உண்ணலாம் ஆனால் பூச்சி, வண்டு உண்ண இயலாது. அது நீரில், இது நிலத்தில்; அவ்வளவுந் தானே. மாடு உண்பவன், பன்றி உண்பவன், புழு உண்பவன் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சொல்கிறர்கள். மாடைக் கொல்லாதே, துன்புருத்தாதே என்று சொல்பவர்கள் கோழியைக் கொன்று சாப்பிடுகிறார்கள். நாய்கள் வீட்டு விலங்கு, அதை கொல்லாதே என்று போர்க்கொடி உயர்த்துபவர்கள், மாட்டை உண்கிறார்கள். அவன் புழு, பூச்சி, எலி, நாய், நத்தை, பாம்பு உண்பவன் என்று குறை கூறுபவர்கள், இறால், நண்டு, மீன், கோழி, பன்றி, மாடு தின்கிறார்கள். ஏன் இந்தத் திணிப்பு?

மற்றவர்களுக்கு அடிக்கக் கூடாது. மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது. ஏன் இதைச் செய்யக் கூடாது? எனக்கு அது தானே சந்தோசமாக இருக்கிறதே. நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இது தான் அவனுக்குத் தண்டனை. மற்றவர்களை அனுசரித்துப் போக வேண்டுமா? அவர்கள் எனக்கு எதற்கு. எனக்கு அவர்கள் தேவையில்லை. நான் எப்படியாயினும் வாழ்வேன். என் வாழ்க்கை, நான் தானே வாழ வேண்டும். மீண்டும் அந்த கெட்ட பழக்கங்களைச் செய்யாதே என்னும் குரலொலிகள்.

வளர்ந்தால், என்னை இவ்வாறு இவர்கள் கட்டுப்படுத்த மாட்டர்கள். என் போக்கில் என்னை விட்டு விடுவார்கள். பொறுத்திருப்போம்.

இளைஞனாகியும் வழிநடத்தல்கள் தீரவில்லையே. அந்தப் பெண்ணிடம் கதைக்காதே; அந்த ஆணிடம் கதைக்காதே; இவ்வாறு செயல்படாதே என்றெல்லாம் இன்னும் ஏன் சொல்கிறீர்கள். அவளும் விருப்பப் படுகிறாள்; அவனும் விருப்பப்படுகிறாள்; பிறகேன் அதைத் தப்பு என்கிறீர்கள்? வயது போதாது என்றொரு சாக்கு போக்கு. அவளுக்கும் ஆசை, அவனுக்கும் ஆசை. எங்கள் வாழ்க்கை, எங்கள் விருப்பம். இதிலும் உங்கள் மூக்கை நுளைக்கிறீர்கள். சரி இவள் பிடிக்கவில்லை; இவன் பிடிக்கவில்லை, இன்னொருத்தி; இன்னொருத்தன், மீண்டும் இன்னொருத்தி; இன்னொருத்தன் என்று போகலாம் என்றாலும் உங்களால் தொல்லை தான். பல பெண்கள்; பல ஆண்கள் எனக்கு சுகமாக இருக்கிறது. அவர்கள் ஏமாறுவதற்கு நானா பொறுப்பு? நான் திறமை சாலி, அவ்வளவுந் தான். எது எனக்கு சுகமாக இருக்கிறதோ அது எல்லாம் கெட்ட பழக்கங்கள் என்கிறீர்களே. கெட்டவனாக வாழ்ந்தால் தான் எனக்கு சந்தோசம் என்றால் அப்படியே வாழ விடுங்களேன். என் வாழ்வில் எபோதும் அந்த நல்லவனாக இரு என்பதை ஒருவருமே சொல்லாம் இருக்குகிறீர்களே இல்லையே.

எனது தேவைக்கேற்ப செல்வம் இருந்தால் மட்டும் போதாதென்று மேலும் சம்பாதிக்க சொன்னீர்களே. எனது தாய் தந்தையருக்காக பணம் செய்ய வேண்டும். என் மனைவிக்காக பணம் செய்ய வேண்டும். என் குழந்தைகளுக்காகவும் பணம் செய்ய வேண்டும். ஏன் எல்லோருக்காகவும் நான் பாடுபட வேண்டும்? அவர்களிடம் திறமை இல்லையா? அவர்களே என்னைப் போல் பாடுபட்டு முன்னுக்கு வரட்டுமே. இப் பிறவிப் பயனை, அவர்களுக்காக நானே ஏன் செய்ய வேண்டும்?

இன்னும் கொஞ்ச நாட்கள். நான் சொந்தக் காலில் நின்று எனக்கென்று ஒரு குடும்பம் வரட்டும். இவர்களுக்கு ஒரு வழி பண்ணுகிறேன்.

திருமணமும் உங்கள் ஏற்பாடே. தாலி கட்டத் தான் வேண்டுமா? மோதிரம் மாற்றத் தான் வேண்டுமா? கோலாகலமாக அலங்கரிக்கத் தான் வேண்டுமா? மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ. எனக்குத் திருமணம், என் நன்மைக்காக சடங்குகள், ஆனால் ஐயர் என்ன சொல்கிறாரென்று எனக்கே புரியவில்லை. மற்றவர்களுக்காக நான் முட்டாளாக்கப் படுகிறேன்.

குடும்பம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும். குடும்பத்தை இப்படி கொண்டு போ. இவை எல்லாம் நான் கேட்டேனா. எனக்கு விருப்பமே இல்லையே. இங்கும் முட்டுக் கட்டைகள். ஒரு துணையுடன் தான் வாழவேண்டுமா? என்னால் முடியும் என்றால் என்னை விடுங்களேன். அது என்ன ஒருவனுக்கு ஒருத்தி. என் பிள்ளைக்கு நான் நினைத்த பெயரே என்னால் வைக்க முடியாது. சீ அப்படி பெயர் வைக்காதே. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். இந்தப் பெயரை வை, சின்னப் பெயரை வை, புதுப் பெயரை வை. எனது பிள்ளைக்கு ஜீசஸ் கிறைஸ்ற் என்று பெயர் வைக்க விருப்பம்; தமிழில் யேசு என்று பெயர் வைக்க விருப்பம். முடியவில்லையே! இதிலும் நீங்கள் சொல்வதையே நான் செய்கிறேன்.

எனது வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்று எனது சுற்றத்தார்கள் தான் முடிவெடுக்கிறார்கள்.

(தொடரும் …)

<< பாகம் – 01

_____
CAPital

நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்? [01]

Filed under: Sprituality — CAPitalZ @ 9:50 am

நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்?

நானாக விரும்பிக் கேட்கவில்லை. நான் பிறக்கிறேன் என்று அறிந்திருக்கவில்லை. முன் பிறப்பில் என்னவாகப் பிறந்தேன் என்றும் அறிந்திருக்கவில்லை. அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்பேன் என்றும் அறியேன். பிறப்பு இருக்கா என்று கூட அறியேன். இப் பிறவியில் என் செயற்பாடு, என் பிறப்பின் முக்கியத்துவம் ஏதும் அறியேன்.

ஏதோ என்னை ஓர் நதியிலே யாரோ தள்ளிவிட்டது போல், எனக்கே தெரியாமல் பிறந்து, நீரின் ஓட்டத்திலே அடிபடுவதுபோல், வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

எல்லோரும் நல்லவனாக இரு, நல்லவனாக இரு என்று சொல்கிறார்களே, ஏன் நான் நல்லவனாக இருக்க வேண்டும்? மற்றவர்களுக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும்? வாழ்க்கையில் கெட்டவனாக இருந்தாலும் வாழலாம் தானே. கெட்டவர்கள் வாழாமலா போய்விட்டார்கள்? மிகவும் நல்லவர்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்தா போய்விட்டார்கள்?

கெட்டது செய்தால் என்ன, நல்லது செய்தால் என்ன; நான் தானே வாழ்கிறேன். ஏன் பயப்பட வேண்டும்? நானே படித்தேன். நானே பாடுபட்டேன். நானே என் திறமையால் முன்னுக்கு வருகிறேன். கொள்ளையடிப்பதென்றாலும், மற்றவர்களை ஏமாற்றுவது என்றாலும் அதுவும் என் திறமை தானே. அப்போ என்னை நம்பித் தான் நான் இருக்கிறேன்.

கடவுள் என்ன, நான் துன்பத்தில் இருக்கிறேன் என்று எப்போதாவது என் முன் தோன்றி எனக்கு உதவியிருக்கிறாரா, அல்லது வேறு எவருக்குமாவது உதவியிருக்கிறாரா? அப்போ கண்ணுக்குத் தெரியாத கடவுளை, துன்பத்தில் உதவாத கடவுளை, எங்குமே நேராக காணமுடியாத கடவுளை எண்ணி ஏன் நான் நல்லவனான இருக்க வேண்டும்? குறுக்கு வழியிலே என் திறமை கொண்டு நான் முன்னேறப் போகிறேன்.

நான் நல்லவன் என்று சொல்ல முடியாத செயல்களால் பாதிக்கப்படும் மற்றய மனிதர்களைப் பற்றி கவலைப் பட வேண்டுமா? அவர்கள் திறமை அற்றவர்கள்; அவ்வளவுந் தான். என் சாதுரியம், நான் வெல்கிறேன். நான் மேலே உயர வேண்டுமென்றால், இன்னொருவர் கீழே தாழ்த்தப் பட வேண்டுமல்லவா. நான் வெல்ல வேண்டும் என்றால், வேறொருவர் தோற்க வேண்டுமல்லவா. நான் ஓட்டத்திலே முதலாம் இடம் பெறவேண்டுமானால் யாரோ ஒருவர் தோல்வி பெற்று இரண்டாம் இடம் வரவேண்டும் தானே. அவர் இரண்டாம் இடம் வந்தால் தானே நான் முதலாம் இடம் என்று மார்தட்டிக் கொள்ளலாம். நான் முதலாளியாக இருக்கவேண்டுமானால் யாரோ தொழிலாளியாக இருக்கவேண்டும் தானே. நான் ஒன்றை விற்பனைசெய்கிறேன் என்றால் அதை பணம் கொடுத்து [இழந்து] வாங்க ஒருவர் வேண்டும் தானே. எல்லோருமே வென்றால், வெற்றி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை.

எப்படியாயினும் நான் முன்னேற வேண்டும். எந்த வழி என்பது இப்போ பிரச்சினை இல்லை என்று முடிவாகிவிட்டது. நல்லவனாக வாழ்ந்தால், வெறும் பெயர் தான் மிச்சம். சாதுரியனாக, கெட்ட வழியே ஆனாலும், நான் வேண்டும் செல்வத்தை, சுகத்தைப் பெறலாம். இவ் உலகில் வேறு என்ன வேணும்? ஏன் பிறந்தேன்? பொருள் தேட; சுகம் அனுபவிக்க. எனக்கு தெரிந்த வரையில், ஏன் எல்லோருமே இந்த உலகில் நன்றாக வாழ வேண்டும் என்றே போராடுகிறார்கள். அப்போ அது தான் என் குறிக்கோள். அப்போ அது தான் இப் பிறபிப் பயன்.

பாகம் – 02 >>

______
CAPital

Create a free website or blog at WordPress.com.