ஒரு பார்வை

September 22, 2006

கனடாவின் வளர்ச்சி

Filed under: Government,Government of Tamil Eelam,Politics — CAPitalZ @ 10:51 am

இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஆயுத தளபாடங்களை பிரித்தானியாவிற்குத் தான் விற்றது. இதனால் தான் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்தது, மற்றவர்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கையில். கவனிக்கவேண்டிய விடயம், பிரித்தானிய உரிமையாளர் அமெரிக்காவில் தொழில் தொடங்கி ஆயுதங்கள் செய்யப்படவில்லை.

இன்றைய கால கட்டத்தில், வெளி நாட்டு வியாபாரிகள் இந்தியாவிலோ (அ) வேறு நாடுகளில் தங்கள் தொழிலைத் தொடங்கி அவர்கள் காசு கறக்கிறார்கள். இதனால் உள்நாட்டு வியாபாரி பெரிதும் போட்டி போட முடியாமல் இருக்கிறது.

வெளிநாட்டு வியாபாரம் நம் நாட்டிற்குள் வருவதால் தொழில் வாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால், வெளிநாட்டவன் நம்மை வைத்து, நம் நாட்டிலேயே உழைக்கிறான் என்பதும் உணமை தான்.

கேள்வி நம் நாடு முன்னேறுகிறதா? நம் நாட்டு மக்கள் முன்னேறுகிறார்களா?

அதற்காக நம்மவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று நல்லா தானே முன்னேறி வாழ்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். இது நம் நாட்டின் வளர்ச்சி அல்ல. நம் நாட்டு மக்களின் முன்னேற்றம் இல்லை. இது நம் நாட்டின் மனித வளம் வெளியேற்றம். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மனிதனின் செலவாணிப் பங்கு குறைந்து விட்டது. அதே நேரத்தில், வெளிநாட்டில் இருப்பவர் பணத்தை சொந்த நாட்டிற்கு அனுப்பினால் சொந்த நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. இப்படித் தான் இலங்கைத் தமிழர்கள் [அரசில் பதிந்த வியாபாரி மூலம்] அனுப்பும் பணம் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது.

ஏன் வெளிநாடுகள் திறைமைசாலிக்கு அதிக சம்பளம், சலுகை என்று கொடுத்து தம் நாட்டுக்கு எடுக்கிறார்கள்? அவரின் மேல் உள்ள மனிதாபிமான அக்கறையா? இல்லவே இல்லை. இவரால் தம் நாடு முன்னேறும் என்பதால்.

கனடாவில், குடும்பத்தை அழைத்துக்கொள்ளலாம் [sponser]. ஏன் இப்படி செய்கிறார்கள்? குடும்பமும் இங்கே வந்து விட்டால், இவர் தன் தாய் நாட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும் என்ற எண்ணம் மிகக் குறைவாகிவிடும். குடும்பத்திற்கு என்று இந்த நாட்டிலிருந்து வெளியேறும் கனடாப் பணம் இல்லாதொழிந்து விடும். ஆகவே கனடாப் பணம் கனடாவிற்குள்ளேயே நிற்கும்.

ஏன் சும்மா இருக்க பணம் கொடுக்கிறார்கள்? [welfare] பாவம் என்று பார்த்தா? இல்லை. பணம் இல்லையாயின் இவன் அதைத் தேடி வேறு நாட்டிற்கு போய்விடுவான். அப்படி அவன் போகாவிட்டாலும், நாட்டில் பஞ்சம் அதிகரித்து விடும். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு தான் பிரச்சனை. இந்தக் காசை எடுப்பவன் என்ன செய்கிறான்? அவ்வளவத்தையும் இந்த நாட்டுக்குள்ளேயே செலவழிக்கிறான். ஆகவே, தன்னை அறியாமலேயே அவன் இந்த நாட்டு பொருளாதாரத்தை உருட்டிக்கொண்டிருக்கிறான். பொருளாதாரம் தாழ்ந்துவிடக்கூடாது என்று தான் அரசாங்கமும் சும்மா இருக்கப் பணம் கொடுக்கிறது.

பல்கலைக்கழகத்தில் படிக்க இங்கு இலவசம் அல்ல. இருந்தாலும், அரசாங்கம் வட்டி இல்லாமல் பணத்தை கடனாக உதவி செய்யும். ஏன், பாவம் படிக்கட்டும் என்றா? படித்து வருபவர்கள் பணக் கஷ்டத்தால் படிக்காமல் விட்டால் நாட்டில் அறிவாளிகள் குறைந்து விடுவார்கள். பிறகு வெளிநாட்டிலிருந்து அறிவாளிகளை வாங்க வேண்டி ஏற்படும்.

மேலே சொல்லப்பட்டவை பொதுவுடமை சிந்தனையாகத் தான் தெரிகிறது.

கனடாவை ஒரு குழந்தை என்பார்கள். ஏனெனில் மற்றய நாடுகள் போல் கனடாவிற்கு ஒரு நீண்ட வரலாறு ஏதும் இல்லை. கனடா என்று உருவாகியே சில வருடங்கள் தான் [மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது]. தன்னை வளர்த்துக்கொள்ள கனடா இப்படி சலுகைகள் கொடுக்கிறது. முன்பு சும்மா இருக்க பணம் கொடுக்கும் முறையில் [welfare] அதிக பணம் கொடுத்தார்கள். வேறு பல சலுகைகள், உதவிகள் என்று பல. இப்போது அவை குறைந்து விட்டன. ஏனெனில், கனடாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பணம் இல்லை என்றில்லை. தேவை குறைகிறது. முன்பு குடும்பத்தாரை அழைக்க கட்டணமாக $500 கட்டவேண்டி இருந்தது [அதற்கு முதல் என்ன என்று எனக்குத் தெரியாது]. இப்போது $1,500 கட்ட வேண்டி உள்ளது. மூன்று மடங்காக உயர்ந்து விட்டது. தேவை குறைகிறது. வட்டி இல்லாமல் பணம் கொடுத்து அறிவாளிகளை இங்கேயே உருவாக்குகிறார்கள். அதனால், வெளிநாடுகளிலிருந்து அறிவாளியை கொண்டுவரவேண்டிய கட்டாயம் குறைகிறது.

இதை இன்னொரு விதமாகவும் எடுக்கலாம். அதாவது உள்நாட்டு மக்களை முன்னேற வழி சமைக்கிறது. வெளிநாட்டவர் படிக்க பல்கலைக்கழகங்களின் கட்டணமாக மூன்று மடங்கிற்கு மேல் கட்ட வேணும்
, உள்நாட்டவரை விட.

மொத்தமாக பார்த்தால், நாட்டின் வளர்ச்சிக்காக பல சலுகைகள் செய்து வெளிநாடுகளிலிருந்து மனித வளம் மற்றும் பொருளாதரத்தை இறக்குமதி செய்தார்கள். அதே வேளையில், நாட்டில் இருப்பவர்களையும் பாதுகாத்து அவர்களை முன்னேற்றவும் செய்கிறார்கள். எதிர்காலத்தில், நாட்டில் இருப்பவர்களை மட்டும் பார்த்தால் போதும். வெளிநாட்டு உதவி தேவை இல்லை.

வேடிக்கை என்னவென்றால், இங்கு என் நாடு கனடா என்று சொல்லி மார்தட்டி பிதட்டிக்கொள்பவர்கள் எவருமில்லை. எலும்பே உறைந்து போகுமளவிற்கு குளிர். சூறாவளி என்பதுபோல், இங்கு பனிச் சூறாவளி அனேகமாக ஒவ்வொரு பனிக்காலமும் எங்காவது வந்துவிடும். வருடத்தில் 4 மாதங்கள் தான் வெக்கை காலம். வீதியில் விழுந்த பனியை அகற்றுவதற்கே கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இவ்வளவு இயற்கை அனர்த்தங்களுக்கும் இடையில் நாடு வளர்ச்சி அடைகிறது. கனடாவின் குளிர் பற்றி சொல்வதென்றால், அதற்கே என்று ஒரு கட்டுரை எழுதலாம். எங்கள் நாடுகளில் இப்படி எல்லாம் இல்லாமல் இருந்தும் முன்னேறவில்லை.

என்னமோ எதோ செய்து நாட்டை முன்னேற்றுவதில் வெள்ளைக்காரன் மிகக் கெட்டிக்காரன் தான் என்பதை மறுக்க இயலாது.

_____
CAPital

August 24, 2006

கனடா + கியூபெக் [ஃபிரெஞ்சு மாகாணம்]

Filed under: Government,Government of Tamil Eelam — CAPitalZ @ 4:25 pm

சகலருக்கும் சமத்துவம். எதிலும் நீங்கள் போட்டியிடலாம். சாதிப் பிரச்சனை இல்லை. எவரும் படிக்கலாம். உங்கள் திறனுக்கே இங்கு முக்கியத்துவம். நடுத்தர குடும்பம் (அ) தாழ்த்தப்பட்ட சாதிக்கு இவ்வளவு விகிதம் என்று எதுவும் கிடையாது.

ஒரு சாதி குறைந்த வெள்ளக்காரனுக்கும், சாதி கூடிய வெள்ளைக்கரனுக்கும் என்ற பிரச்சினை இல்லை. நிற வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழர்களைப் போல் வெள்ளைக்காரனுக்குள்ளையே பிரித்துப் பார்பது இல்லை. கீழ்ச் சாதி மேல் சாதி எல்லாம் நமக்குளே தானே. “discrimination against designated groups, usually in the area of employment.” இது வந்து இங்கு பெண்கள், வலது குறைந்தோர், ஓரினச் சேர்க்கை புரி வோர் என்று வெள்ளையர்களிடம் பாகுபாடு செய்தல் என்பதற்காகத் தான். அதற்காகக் கூட, இத்தனை விகிதம், இந்த group ஐ சேர்ந்தோர் இங்கு இருத்தல் வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது.

நீங்கள் சொல்வது போல், ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரன், விகிதாசாரப்படி பல்கலைக் கழகம் புகுந்து, படித்து ஒரு வைத்தியனாகவோ, (அ) அதற்கு மேலாகவோ வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனது சமூக அந்தஸ்து, உயர்ந்து விட்டது. ஆனால், அவனுடைய பிள்ளையை பாடசாலையில் சேர்க்கும் போதோ, வேலையில் சேர்க்கும் போதோ, எந்த சாதி என்ற கேள்வி விண்ணப்பப் படிவத்தில் இருந்தால், அவன் அந்த சாதியை விட்டு மீழ்வது எங்கனம்?

கனடா பாடசாலை விண்ணப்பப் படிவத்தில் எந்த சாதி என்று கேட்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தம் வழி. மற்றவன் பிரச்சினையில் மூக்கை நுளைக்கமாட்டார்கள். சந்தோசமாக வாழ வேண்டும் என்பதில் இங்கு எல்லோருக்கும் ஆவல். ஒரு நாளில், பாதி நேரத்தை சந்தோசமாக செலவழிப்பதிலேயே செலவிடுகிறார்கள். பணக்காரன் ஆவது அல்ல அவர்கள் குறிக்கோள்.

என்னைப் பொறுத்த வரையில், சாதி குறைந்தோருக்கு இவ்வளவு சதவிகிதம் என்று சொல்வதால், அரசாங்கமே அவர்களை சாதி குறைந்தோராக காட்டிக் கொடுக்கிறதே!

ஆனால் ஒன்று, வெள்ளையனிடம் தனி நபர் சுதந்திரம் முக்கியமாக கருதப்படுகிறது. நம் நாட்டவரில், சொந்தம், உற்றார், உறவினர் என்று ஒரு கூட்டு சுதந்திரமாக பார்க்கிறோம். நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

சின்ன உ+ம்: சிறு பிள்ளையை வீதியால் கொண்டுபோகும்போது, நம்மவர்கள் பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு பத்திரமாக அழைத்துச் செல்வார்கள். ஏன் அனேகமானவர்கள் தூக்கித் தான் செல்வார்கள். ஆனால் வெள்ளையர்கள், எவ்வளவு நேரமெடுத்தாலும், நடத்தியே செல்வார்கள். கையைக் கூடப் பிடிக்க மாட்டார்கள். மிகவும் சிறு பிள்ளை என்றால் விரலைக் கொடுப்பார்கள். அவர்கள் சொல்லும் விளக்கம் என்னவென்றால், சிறு வயதிலேயே அப் பிள்ளைக்கு தன் மீது நம்பிக்கை வர வேண்டுமாம். தன்னால் தனியாகவும் பாதுகாப்பாகவும் நடக்க இயலும் என்ற நம்பிக்கை வரவேண்டுமாம். இது தான் அவர்களின் தனி நபர் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்கிறதென்று நம்புகின்றேன்.

கனடாவின் ஒரு மாகாணம் ஃபிரஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் மாகாணம். அந்த ஒரு மாகாணத்திற்காக, ஏனைய 9 மாகாணங்களும் [including economic power Ontario], 3 territories எல்லாம் ஃபிரஞ்சையும் அங்கீகரிக்க வைத்திருக்கிறது கியூபெக் மாகாணம். சும்மா பேச்சளவில், கொடுத்தேன் என்று இல்லாமல், கனடாவின் நடுவண் அரசாங்கத்தின் அனேகமான வேலைகளிற்கு ஃபிரஞ்சு மொழி அவசியம். அவர்கள் ஒரு பரீட்சை கூட வைப்பார்கள். இங்கே ஒரு பேச்சு அடிபடுகிறது. வருங்காலத்தில், கனடா அரசாங்கம் முழுக்க ஃபிரஞ்சு மக்களாலேயே ஆகிவிடும் என்று.

இது பத்தாதென்று அவர்கள் மேலும் பல சலுகைகள், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெற்றிருக்கிறார்கள். Media வில் அவர்கள் தங்கள் மாகாணத்தை ஒரு நாடாக கருதியே செய்திகள் வெளியிடுவார்கள். மற்றய நாடுகளுடன் தங்கள் மாகாணத்தையும் ஏதோ இன்னொரு நாடு போல் தான் ஒப்பீடு பண்ணுவார்கள். ஏன் ஃபிரஞ்சு புத்தகங்களில், மாகாணம் என்று இல்லாமல் தனி நாடென்றே எழுதப்பட்டிருக்கும். இதற்கெல்லாம், கனடா அரசாங்கம் சலுகைகள் கொடுத்திருக்கின்றது.

எந்த ஒரு பாராளுமன்ற முடிவு எடுக்கப்பட்டாலும் கியூபெக் இற்கு என்று ஒரு தனி சலுகையைப் பெற்று விடுவார்கள். அவர்கள் மாகாணத்தில் அங்காடிகள் என்று எல்லாம் ஃபிரஞ்சு மொழியில் பெரிதாகவும், ஏனைய மொழிகளில் [ஆங்கிலம் உட்பட], சிறிதாகவே இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்திலும் ஃபிரஞ்சு மொழி கட்டாயப் பாடம். பேரூந்து ஓட்டுனரிலிருந்து காவல்துறை மட்டும், நீங்கள் ஃபிரஞ்சு மொழியில் பேசினால் உங்களுக்கு சாதகமாக அவர்கள் நடப்பார்கள். 50 தொழிலாளிகளுக்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் அவர்களது கணினி பிரஞ்சு மொழியிலேயே இருத்தல் வேண்டும் என்பது இங்கத்தைய சட்டம்.

அவ்வளவு ஏன், அரச உதவி பெறும் வானொலிகளில் மூன்று பாடல்கள் ஒலிபரப்பினால், 2 பாடல்கள் ஃபிரஞ்சு மொழிலேயே இருத்தல் வேண்டும். கனடாவில் வைத்தியசாலைகள் தனியார் மயம் இல்லை. ஆனால், கியூபெக் இல் தற்போது சில சத்திர சிகிச்சைகள் தனியாரால் செய்யப்படக்கூடியவாறு வந்திருக்கிறது. மற்ற மாகாணங்களில் இவ்வாறு இல்லை. கனடாவில் இருப்பவர்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இங்கு வரவழைத்து தங்க வைக்க முடியும் [sponsor]. கியூபெக் மாகாண அரசும் ஒரு தேர்வு நடத்தி அதில் தெரிவுசெய்யப்பட்டவர் தான் பின் கனடா அரசாங்கத்தாலும் தெரிவுசெய்யப்படுவார். இப்படிப்பட்ட சலுகைகள் கியூபெக் மாகாணத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

இப்படி கியூபெக்கிற்கு ஒரு விசேட சலுகை கொடுக்கப்படுதே என்று எந்த ஒரு எதிர்க்கட்சியும் போராட்டத்தில் இறங்கியது இல்லை. கியூபெக் மாகாணத்திற்கு அதிக சலுகை கொடுக்கப்படுகிறது; கனடாவில் அந்த மாகாணத்திற்கு மட்டும் இப்படி சலுகைகள் கொடுப்பது நியாயமில்லை என்று ஒரு வேற்றுமையை ஆங்கில மக்களிடையே உருவாக்கி வாக்குகளை கொள்ளை அடிக்கலாம் என்று எந்த ஆங்கில அரசியல்வாதியும் செய்ததில்லை. நாடு பிரியக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் அடக்குமுறையைக் கையாழாமல், தங்களை விட மேலதிக சலுகைகளைக் கொடுத்து அகிம்சையை உண்மையில் இன்றைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கிறார்ககள்.  ஆங்கில அரசியல்வாதிகள் அந்த சலுகைகளை ஒரு அத்தியாவசியம் என்றே பார்க்கிறார்கள். ஆங்கில மக்கள் இதுவரைக்கும் கியூபெக் இற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது இல்லை.

இவ்வளவு கொடுத்தும், அவர்கள் பத்தாது எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று இரு தடவை தேர்தல் வைத்து, அரும்பொட்டில் பிரியாமல் இருக்கிறார்கள். என்ன வியற்பாக இருக்கிறதா?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடையம் என்னவென்றால் இது இவர்கள் நாடே இல்லை. கனடா, அமெரிக்கா எல்லாம் வெள்ளையனின் தேசமே இல்லை. வந்தேறு குடிகள், தங்கள் மொழியை பிரதான மொழியாக சட்டமேற்றியது. ஆதி வாசிகள், இன்றும் சமூக சீர்கேடுகளால் அழிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இங்கே. ஆதி வாசிகளுக்கு சும்மா இருக்க பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் முன்னேறக்கூடாது என்று எண்ணியோ என்னவோ. இதே போல் தான் அமெரிக்காவிலும், ஸ்பானிய மொழி பேசுபவர்கள் இருந்தாலும் ஆங்கிலம் தான் அரச மொழி.

ஃபிரஞ்சு மொழிக்காரர் அவர்கள் மொழி மேல் கொண்ட பற்றளவு, தமிழருக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

_____
CAPital

July 14, 2006

லஞ்சம் ஒழிக்க ஒரு வழி

Filed under: Government — CAPitalZ @ 3:28 pm

லஞ்சத்தை ஒழித்தால், கடமை தன் செயலைச் செய்யும்.

நான் விஜகாந்திற்கு ஒரு ஐடியா கொடுக்கலாம் என்றிருந்தேன்.  லஞ்சத்தை ஒழிக்க.. [கி … கி.. கி…]

ஒரு அறிவித்தல் விடவேண்டும்.  இன்றிலிருந்து ஒரு 30 நாட்களுக்குள் வாங்கும் லஞ்சம் அத்தனையயும் வாங்குங்கள்.  ஆனால், அந்த திகதிக்குப் பின் எவர் லஞ்சம் வாங்கினாலும் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்.  இது தான் தண்டனை.  குறைந்த தண்டனை என்று எதுவுமில்லை.  இப்படிச் செய்தால், வேலையில்லா பட்டதாரிகள் சந்தோசப் படுவார்கள்.

சில நாட்களுக்குப் பின், மீண்டும் ஒரு அறிவித்தல், எவர் லஞ்சம் வாங்குகிறார் என்று ஆதரபூர்வமாக மக்கள் காட்டிக்கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு [மக்களுக்கு] லஞ்சத்தின் தொகை இரட்டிப்பாக்கி இலவசமாக அரசாங்கத்தால் கொடுக்கப்படும்.  இப்போ மக்களே முன்னுக்கு வருவாங்கள்.  [ஏன் சில நாட்களின் பின் என்று யோசிக்கிறது தெரிகிறது.  அதாவது ஒரு அறிவிப்பிலேயே மக்கள் அதை சீரியசாக எடுக்க மாட்டார்கள்]

சில நாட்களின் பின் இன்னுமோர் அறிவித்தல்.  அந்த குறிப்பிட்ட திகதிக்கு முன் வாங்கிய/ சேர்த்த [இற்றைவரைக்கும்] சொத்துக்கள் பற்றியோ, லஞ்சம் பற்றியோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாடாது.  இது லஞ்சம் வாங்கியவர்கள் ஏற்கனவே தப்பு செய்துவிட்டேன் இனிமே திருந்தினா மட்டும் என்ன விட்டு விடவா போகிறார்கள் என்று எல்லாத்தையும் சுருட்டிக் கட்டாமல் இருக்க உதவும்.

சில நாட்களின் பின் இன்னுமோர் அறிவித்தல்.  அந்த குறிப்பிட திகதிக்குப் பின் அரசாங்கத்தாலேயே மர்ம மனிதர்கள் லஞ்சம் கொடுக்க எத்தணிப்பார்கள்.  அப்போது லஞ்சம் வாங்கினாலும் அதுவும் அவர்களின் வேலை பறிபோவதற்கு ஆதரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும்.  கனடாவில் கடைகளில் 18 வயதிற்கு கீழ்ப் பட்டவருக்கு கடைக்காரன் சிகரட் விக்கிறானா என்று சோதிப்பதற்கு ஒரு பொடியனை இதற்கென்றே செட்டப் பண்ணி அனுப்புவார்கள்.  அவன் அணிந்திருக்கும் சாதாரண தொப்பியில் மிகச் சிறிய கமரா இருக்கும் [மிcரொ cஅமெர].  இப்படி ஒரு போடு இந்தியாவில் போடவேண்டும்.

இப்படி அடுத்தடுத்து அறிக்கைகள் விட, மக்கள் ஒரு பரபரப்பிற்கு உள்ளாவார்கள்.  குறிப்பிட்ட திகதியின் பின் எவர் பிடிபடுகிறாரோ அவரை லஞ்சத்தால் வேலை இழந்தோர் என்று காட்ட வேண்டும்.  பரப்பான செய்தியாக இருக்க வேண்டும்.

எப்படி என்ற ஐடியா? 😀

யாராவது விஜயகாந்தின் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் சொல்லுங்களேன்.

 

_____
CAPital

Create a free website or blog at WordPress.com.